சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
Published on

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மகா பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு மஞ்சள், வில்வம் மற்றும் அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது.

இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அரியலூர் கைலாசநாதர் கோவில், குறிஞ்சான் குளம் ஏரி கரையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில், ரயில்வே கேட் சாலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் அழகர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பால், தயிர், சந்தனம், திருநீறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உடையார்பாளையம் பயறனீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நந்தி பெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

செந்துறையில் பழமை வாய்ந்த சிவதாண்டேஸ்வர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி பகவானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் பெரியநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உலா வந்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com