

ஊட்டி
புனித வெள்ளியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
புனித வெள்ளி
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ஊட்டியில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் மதியம் 3 மணியளவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அவர், பங்கு குரு ஸ்தனிஸ் மற்றும் உதவி பங்கு குரு ஜோசப் ஆகியோர் தரையில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
சிலுவை துண்டு
காந்தல் குருசடி ஆலயத்தில் பங்கு தந்தை அமிர்தராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சுமந்து சென்ற சிலுவையின் சிறிய பகுதி ரோம் நகரில் இருந்து கடந்த 1939-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டு குருசடி ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று அந்த சிலுவை துண்டு வெளியே எடுக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஊட்டி சி.எஸ்.ஐ. புனித தாமஸ் ஆலயத்தில் காலை 11.30 மணி முதல் மும்மணி நேர தியான ஆராதனை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து சிலுவை பாடுகளின்போது கூறிய 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கப்பட்டது. இதில் பங்கு குரு அருண் திலகம் மற்றும் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று ஊட்டி புனித மரியன்னை ஆலயம், புனித வெஸ்லி ஆலயம், புனித ஸ்டீபன் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஊர்வலம்
கூடலூர் தூய மரியன்னை ஆலயத்தில் பங்கு குருக்கள் ரெனால்டு பிரபு, சார்லஸ் பாபு ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவ மக்கள் முக்கிய சாலைகளில் சிலுவையை சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து ஆலய வளாகத்தில் உள்ள கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதைபோல் தத்துரூபமாக நடித்து காண்பித்தனர்.இதை கண்டு கிறிஸ்தவ மக்கள் உருக்கமாக பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து ஆலயத்தில் ஆராதனைகள் நடைபெற்றது. கூடலூர் குழந்தை இயேசு ஆலய பங்கு குரு ஹென்றி ராபர்ட் தலைமையில் நந்தட்டியில் இருந்து ஊர்வலம் தொடங்கி செம்பாலா, எம்.ஜி.ஆர். நகர், நர்த்தகி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.
மும்மணி நேர தியானம்
குன்னூரில் புனித அந்தோணியார் ஆலயம், பாய்ஸ் கம்பெனி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், அருவங்காடு நற்செய்தி நிலையம் போன்ற கத்தோலிக்க ஆலயங்களில் புனித வெள்ளி ஆராதனை நடைபெற்றது. குன்னூர் சி.எஸ்.ஐ. வெஸ்லி ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு மும்மணி நேர தியானம் நடைபெற்றது.
இதில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப் பட்டபோது கூறிய 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கப்பட்டது. மேலும் சி.எஸ்.ஐ. தூய யோவான் ஆலயம், கேட்டில் பவுண்டு தூய அந்திரேயா ஆலயம், நல்லப்பன் தெரு ஜோசப் ஆலயம் போன்ற ஆலயங்களில் மும்மணி நேர தியானம் நடைபெற்றது.