புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நெல்லை அருகே உள்ள மேலதிருவேங்கடநாதபுரத்தில் தென்திருப்பதி என பக்தர்களால் அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோவிலில் அதிகாலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. காலை சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

வரதராஜ பெருமாள் கோவில்

நெல்லை சன்னியாசி கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.

நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில், குறிச்சி அக்ரஹாரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

நெல்லை டவுன் மேலமாட வீதியில் உள்ள லட்சுமி நரசிங்கபெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

கருடசேவை

நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு எட்டெழுத்து பெருமாளுக்கும், பெரியபிராட்டி, இளையபெருமாள், ஆத்தியப்பர், மாயாண்டிசித்தர், ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. இரவில் கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஜடாயு தீர்த்தம் லட்சுமி நாராயணர் கோவிலிலும், காட்டுராமர் கோவிலிலும் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.

சிறப்பு பஸ்கள்

இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு 2-வது வாரமாக நேற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com