

கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டத்தில் பங்குனி உத்திர விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் காக்கையாடியில் ஆறுமுகசுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பங்குனி உத்திரம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வடுவூர்
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது. அப்போது யானை வாகனத்தில் ராஜஅலங்காரத்தில் கோதண்டராமர் வீதி உலா வந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் கோதண்டராமர், சீதாதேவி ஆகியோர் திருக்கோலத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சாமிகளுக்கு முன்பு சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு ஹோம பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமக்கோட்டை
திருமக்கோட்டையில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது. விழாவையொட்டி திருமக்கோட்டை தெற்கு தெருவில் அடைக்கலம் காத்த அய்யனார், முனீஸ்வரர், முன்னோடியான் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு மாவிளக்கு போடுதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திகடனை செலுத்தினர். இரவு குதிரை எடுத்தல் வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர், உபயதாரர்கள் செய்திருந்தனர். இதேபோல் முருகன் கோவில், அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
மன்னார்குடி
மன்னார்குடி காளவாய்கரையில் சக்திவேல்கோட்டம் முருகன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தையொட்டி முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.