அயோத்தி ராமர் கோவில் பற்றி வீடியோ; பாடகி சித்ராவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

வீடுகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை மாலையில் மக்கள் ஏற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.
அயோத்தி ராமர் கோவில் பற்றி வீடியோ; பாடகி சித்ராவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவின் வானம்பாடி என அழைக்கப்படுபவர் பிரபல பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா (வயது 60). சின்ன குயில் சித்ரா என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார்.

தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை வென்றவரான பாடகி சித்ரா, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், கும்பாபிஷேக விழா நடைபெறும்போது, அன்றைய நாளின் நண்பகல் 12.20 மணியளவில், ஸ்ரீராமா, ஜெயராமா, ஜெயஜெயராமா என்று ஒவ்வொருவரும் மந்திரம் கூற வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

வீடுகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை மாலையில் மக்கள் ஏற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். இறைவனின் ஆசிகள் ஒவ்வொருவர் மீதும் பொழியட்டும் என்றும் அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

அவருடைய இந்த பதிவுக்கு சமூக ஊடகத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுபோன்ற செய்தியை வெளியிட்டு, அரசியல் பக்கம் அவர் சார்ந்து விட்டார் என விமர்சனங்களையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

எனினும், அவருக்கு சிலர் ஆதரவையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர். அவர், தன்னுடைய பதிவுகளை வெளியிடுவதற்கு உரிமையும், சுதந்திரமும் உள்ளது என தெரிவித்தனர். அவருக்கு ஆதரவு தெரிவித்து பாடகர் வேணுகோபால் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், சித்ராவின் அறிக்கைகளால் ஏதேனும் வேற்றுமை தோன்றினால் அவரை மன்னிக்க வேண்டும் என்று வேண்டுகோளாக கேட்டுள்ளார்.

சமீபத்தில் திரிச்சூரில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த, மகளிருக்கு அதிகாரமளித்தல் என்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஷோபனா பங்கேற்றார். இதற்காக குறிப்பிட்ட பிரிவினர் அவருக்கு எதிராக தீவிர விமர்சனங்களை வெளியிட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், திரையிசை பாடகி சித்ராவுக்கு எதிராக சமூக ஊடகத்தில் எதிர்ப்பு வலுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com