அயோத்தி ராமர் கோவிலில் பூக்கள், வண்ண விளக்குகளுடன் அலங்கார பணிகள் மும்முரம்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றன. கோவில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாட்கள் பூஜையானது கடந்த 16-ம் தேதி தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக 5 வயது ராமர் சிலை அயோத்திக்கு கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் கோவில் கருவறைக்குள் வைக்கப்பட்டது. கோவில் கருவறைக்குள் கண்கள் துணியால் மூடப்பட்ட ராமர் சிலையின் முதல் படம் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோவில் முழுவதும் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்காக அதிக அளவில் இயற்கையான மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குளிர்காலம் காரணமாக இந்த சிறப்பு மலர்கள் நீண்ட காலம் புத்துணர்ச்சியுடம் இருக்கும். இந்த மலர்களின் நறுமணமும், கவர்ச்சியும் கோவிலுக்கு தெய்வீகத்தின் மற்றொரு அடுக்கைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மலர் அலங்காரம் மற்றும் வண்ண விளக்குப் பணிகளுக்காக தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அவை அனைத்தும் கோவில் அறக்கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் இணைந்து செயல்படுகின்றன. இதுமட்டுமல்லாது அயோத்தி நகரம் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com