ராமர் கோவில் திறப்பு விழா; கங்கையில் 22-ந்தேதி பக்தர்களுக்கு படகு சவாரி இலவசம்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ராமர் கோவில் திறப்பு விழா; கங்கையில் 22-ந்தேதி பக்தர்களுக்கு படகு சவாரி இலவசம்
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 22-ந்தேதி கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக படகு சவாரி வழங்கப்படும் என அங்குள்ள படகோட்டும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து 'மா கங்கா நிஷாத் ராஜ் சேவா' அறக்கட்டளையின் செயலாளர் சாம்பு சாஹ்னி கூறுகையில், "இங்குள்ள நிஷாத சமுதாயத்தைச் சேர்ந்த படகோட்டும் தொழிலாளர்களான எங்களுக்கு கடவுள் ராமருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஆகியோர் நதியை கடந்து காட்டிற்கு செல்ல நிஷாத மன்னரான குகன் உதவி செய்துள்ளார்.

அந்த பாரம்பரியத்தையொட்டி, ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, 22-ந்தேதி பனாரசில் உள்ள கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்களுக்கு இலவச படகு சவாரி வழங்கப்படும். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ராஜ்காட்டில் இருந்து நிஷாத்ராஜ் காட் வரை 'ஷோபா யாத்திரை' (ஊர்வலம்) நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com