ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட ஆதித்யநாத்

அயோத்தி நகரானது, மிக தூய்மையான மற்றும் அழகான நகராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட ஆதித்யநாத்
Published on

அயோத்தி,

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற ஜனவரி 15-ந்தேதிக்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் ஜனவரி 16-ந்தேதி சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு பாரம்பரியங்களை சேர்ந்த 13 அகாராக்களின் 150 துறவிகள் மற்றும் சாமியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிர, 2,200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருக்கிறது. காசி விஸ்வநாத், வைஷ்ணவதேவி போன்ற பெரிய கோவில்களின் தலைவர்கள், மதம் மற்றும் அரசியலமைப்பு மையங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அருண் கோவில், நடிகை மாதுரி தீட்சித், திரை இயக்குநர் மதுர் பண்டார்கர், முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வசுதேவ காமத், இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் மற்றும் பிற பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.

ராமர் கோவில் வளாகம் பாரம்பரிய நகர முறைப்படி கட்டப்பட்டு உள்ளது. அது கிழக்கு மேற்கு திசையில் 380 அடி நீளமும், 250 அடி அகலமும் மற்றும் 161 அடி உயரமும் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தரைப்பகுதியும் 20 அடி உயரம் கொண்டது. மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 நுழைவாயில்களையும் கோவில் கொண்டுள்ளது. இதேபோன்று தங்க முலாம் பூசப்பட்ட கதவுகளும் நிறுவப்பட உள்ளன.

இதுபற்றி உத்தர பிரதேசத்தின் முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், இந்த கதவு 12 அடி உயரமும், 8 அடி அகலமும் உடையது. வருகிற 3 நாட்களில் இன்னும் 13 கதவுகள் நிறுவப்பட உள்ளன.

இந்த கதவுகள் கோவிலின் கர்ப்பக்கிரஹத்தில் மேல்தளத்தில் நிறுவப்பட உள்ளன. கர்ப்பக்கிரஹத்தில் ஒரே ஒரு கதவு இருக்கும். கதவின் வெளிப்புறத்திற்கு மேலே, தூங்கும் நிலையிலுள்ள கடவுள் விஷ்ணுவின் புகைப்படம் ஒன்றும் பதிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

கோவிலில் மொத்தம் 46 கதவுகள் நிறுவப்படும் என்றும் அவற்றில் 42 கதவுகளில் 100 கிலோ எடை கொண்ட தங்க முலாம் பூசப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறது.

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இந்த ஆண்டில் முதன்முறையாக, கடந்த செவ்வாய் கிழமை அயோத்திக்கு சென்றார். அயோத்தி நகரானது, மிக தூய்மையான மற்றும் அழகான நகராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதுடன், அயோத்தியில் தூய்மைக்கான கும்ப மாடலை அமல்படுத்தும்படியும் கேட்டு கொண்டார்.

இதேபோன்று, சாலைகளில் தூசு காணப்பட கூடாது என்றும் கழிவறைகள் தினமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

நடந்து வரும் வளர்ச்சி பணிகளை பற்றி முழு அளவில் ஆய்வு செய்த அவர், புனிதர்கள் மற்றும் சாமியார்களின் நலன்களை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். அவர் கூபெர் திலா பகுதிக்கு சென்று ஜடாயுவுக்கு அஞ்சலியும் செலுத்தினார். குறிப்பிட்ட காலத்திற்குள் அதிக தரத்துடன் பணிகளை முடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என்று அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com