ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு: தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.
ஒலிம்பிக் போட்டி இன்று நிறைவு: தேசிய கொடியை ஏந்தும் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ்
Published on

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதலில் 3 வெண்கலம், மல்யுத்தம், ஆக்கியில் தலா ஒரு வெண்கலம், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் வெள்ளி என 6 பதக்கங்கள் கிடைத்தன. தற்போதைய நிலவரப்படி பதக்கப்பட்டியலில் சீனா 37 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்திலும், அமெரிக்கா 35 தங்கப்பதக்கத்துடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன.

இதன் தொடக்க விழா அணிவகுப்பு அங்குள்ள சென் நதியில் அமர்க்களமாக அரங்கேறியது. படகுகள் மூலம் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள் அணி வகுத்தனர்.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய இந்த விளையாட்டு திருவிழா இன்று இரவு விமரிசையாக நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று தடகளம், கூடைப்பந்து, ஹேண்ட்பால், வாலிபால், மல்யுத்தம் உள்பட 9 விளையாட்டுகளில் 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறுகின்றன. போட்டிகள் முடிவடைந்ததும் நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12 30 மணிக்கு தொடங்குகிறது. நிறைவு விழாவையொட்டி வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கர், மீண்டும் வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்திய இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கின்றனர்.

விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலந்து கொண்டு இசை, ஆட்டம், பாட்டம் என்று பார்வையாளர்களை 2 மணி நேரத்துக்கும் மேலாக மகிழ்விக்க இருக்கின்றனர். வில் போன்று உடம்பை வளைத்து செய்யும் சாகச நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. 'மிஷன்: இம்பாசிபிள்' புகழ் ஹாலிவுட் பட ஆக் ஷன் 'ஹீரோ' டாம் குரூஸ் மிரட்ட உள்ளார். இவரது மோட்டார் சைக்கிள், ஸ்கைடைவிங் 'ஸ்டன்ட்' காட்சிகள் ரசிகர்களை பரவசமடைய செய்யும். அமெரிக்காவின் ராப் பாடகர் ஸ்னுப் டாக், பாடகி பில்லி எய்லிஷ், பேண்ட் வாத்திய குழுவான ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் உட்பட உலகின் முன்னணி இசை கலைஞர்கள் அசத்த உள்ளனர்.

முடிவில் அடுத்த (2028) ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) நகர மேயர் கரென் பாஸ்சிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடி இறக்கப்பட்டு ஒப்படைக்கப்படும். அப்போது அமெரிக்க நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். அத்துடன் அமெரிக்க நாட்டு குழுவினர் இசை நிகழ்ச்சியும் சில நிமிடங்கள் நடைபெறும். 2028 ஒலிம்பிக் போட்டிக்கான முன்னோட்ட நிகழ்ச்சிக்கு பின், எறிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com