வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்

வினேஷ் தனது எதிராளியை நியாயமான முறையில் தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டியதாக சச்சின் தெரிவித்தார்.
வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
Published on

மும்பை,

பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்துகொண்டார். தனது அபார திறமையால் அடுத்தடுத்து வெற்றிபெற்ற அவர், இறுதிப்போட்டி வரை முன்னேறினார். தங்கப்பதக்கத்துக்காக காத்திருந்த அவர், 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டார். இது அவருக்கு பேரிடியாக அமைந்த நிலையில், இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவருக்கு தற்போது அனைத்து தரப்பினரும் ஆதரவும், புகழாரம் சூட்டியும் வருகின்றனர்.

இந்த நிலையில், ஒலிம்பிக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;

"ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உள்ளன. அந்த விதிகள் சூழலில் பார்க்கப்பட வேண்டும். சில சமயங்களில் மறுபரிசீலனை செய்யப்படலாம். வினேஷ் போகத் நியாயமான முறையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். எடையின் அடிப்படையில் அவரது தகுதி நீக்கம், இறுதிப் போட்டிக்கு முன்பே இருந்தது. எனவே, தகுதியான வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படுவது விளையாட்டு உணர்வை மீறுகிறது.

ஊக்க மருந்துகளின் பயன்பாடு போன்ற நெறிமுறை மீறல்களுக்காக ஒரு தடகள வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால், வினேஷ் தனது எதிராளியை நியாயமான முறையில் தோற்கடித்து இறுதிப்போட்டியை எட்டினார். வெள்ளிப் பதக்கத்துக்கு நிச்சயம் தகுதியானவர்.

விளையாட்டிற்கான நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்காக நாம் அனைவரும் காத்திருக்கும் வேளையில், வினேஷ்க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com