கவர்னர் பதவி ஒழிக்கப்படும் - இந்திய கம்யூனிஸ்டு தேர்தல் அறிக்கை வெளியீடு

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம், நிதி ஆயோக் போன்றவை ரத்து செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் பதவி ஒழிக்கப்படும் - இந்திய கம்யூனிஸ்டு தேர்தல் அறிக்கை வெளியீடு
Published on

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அங்கம் வகிக்கிறது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று சென்னை தியாகராயநகரில் நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு வெளியிட, தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாச்சலம் பெற்றுக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், "அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றை பயன்படுத்தி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ஒடுக்கி வருகிறார். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னம் ஒதுக்கும் தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் காலதாமதம் செய்கிறது. தேர்தல் ஆணையம் நடுநிலையான தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் கேள்விக்குறியாகி வருகிறது. ஒரு சில தீர்ப்புகளுக்கு பிறகு நீதிபதிகள் கவர்னர்களாக, எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். நடைபெறுகிற மக்களவைத் தேர்தல் சர்வாதிகாரத்திற்கு எதிரான யுத்தம். அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம் காக்கும் போரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்" என்று அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

வேளாண்துறைக்கு தமிழ்நாட்டை போன்றே தேசிய அளவில் தனி பட்ஜெட் வெளியிடப்படும். அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் வேலை செய்யும் உரிமை அடிப்படை உரிமையாக்கப்படும். மத்திய அரசு கொண்டு வந்த 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் ரத்து செய்யப்படும். அக்னிபாத் திட்டம், நிதி ஆயோக் போன்றவை ரத்து செய்யப்படும்.

திட்ட கமிஷன் மீண்டும் கொண்டு வரப்படும். சிறுபான்மை ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட தகுதி வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும். கவர்னர் பதவி ஒழிக்கப்படும். பொதுப்பட்டியலில் உள்ள பொருள்கள் குறித்து முடிவெடுக்கும் முன் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கப்படும். காஷ்மீர் பிரிக்கப்பட்டது ரத்து செய்யப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com