அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டி அக்னி சட்டி எடுத்து நடிகர் கஞ்சா கருப்பு நேர்த்தி கடன்

எடப்பாடி பழனிச்சாமி ஐயா ஒரு விவசாயி,அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள், நஷ்டங்கள் தெரியும் என்று நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.
அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டி அக்னி சட்டி எடுத்து நடிகர் கஞ்சா கருப்பு நேர்த்தி கடன்
Published on

மண்ணச்சநல்லூர்,

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டி திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எடப்பாடி பழனிச்சாமி ஐயாவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததே பெரிய விஷயம். நடைபெற இருக்கின்ற எம்.பி. தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி குடும்பத்துடன் அக்னிச்சட்டி பால்குடம் உள்ளிட்ட நேர்த்தி கடனை செலுத்தியுள்ளேன். மேலும் திருச்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரும் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து உள்ளேன்.

பல்வேறு மாவட்டங்களில் தற்போது பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற வேண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டால் தானே நடக்கும்.

எதிர்க்கட்சிகள் பாதந்தாங்கி பழனிச்சாமி என விமர்சிப்பது காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள் ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஐயா தலைமையிலான அ.தி.மு.க.,வினர் என்றைக்கும் ஒற்றைப் பரம்பரைதான். தனித்து நின்று ஜெயித்துதான் பழக்கம். கூட்டணி அமைத்து நின்று பழக்கம் இல்லை. என்றைக்கும் எடப்பாடி எடப்பாடிதான். அவர் ஒரு விவசாயி அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும்.

அதனால் பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும் தூற்றுபவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும். ஜெயிப்பவர்கள் ஜெயித்துக் கொண்டே இருப்பார்கள் எடப்பாடி ஐயாவை போல.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com