ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு 'காங்கிரசை கண்டுபிடிக்கும் யாத்திரை' செல்வார் ராகுல் காந்தி - அமித்ஷா

ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு பைனாக்குலர் மூலம் கூட காங்கிரசை காண முடியாது என்று அமித்ஷா கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஹிசார்,

நாடாளுமன்றத்துக்கு 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 6-வது கட்ட தேர்தல் வருகிற 25-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் அரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.

எனவே அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து இருக்கிறது. அங்கு போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பல இடங்களில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

ஹிசாரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அப்போது தனது உரையில், "முதல் 4 கட்ட வாக்குப்பதிவிலேயே பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பா.ஜனதா 270 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மெஜாரிட்டி பெற்று விட்டது. மீதமுள்ள 3 கட்ட தேர்தலும் முடியும்போது பா.ஜனதாவின் மொத்த எண்ணிக்கை 400 இடங்களை கடந்து விடும்.

காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கூட பெறாது. காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அவர் காங்கிரசை கண்டுபிடிக்கும் யாத்திரை செல்வார். பைனாக்குலர் மூலம் கூட காங்கிரசை காண முடியாது. ஒருபுறம் காங்கிரஸ் ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்தது. மறுபுறம் குஜராத் முதல்-மந்திரியாகவும், நாட்டின் பிரதமராகவும் இருந்த மோடி '25 காசு' கூட ஊழல் செய்ததாக யாரும் கூற முடியாது.

இந்தியாவில் கோடை வெயில் அதிகரிக்கும்போது ராகுல் காந்தி தாய்லாந்து, பாங்காக் என்று பறந்து விடுவார். ஜூன் 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். 6-ந் தேதி அவர் விடுமுறைக்காக சென்று விடுவார். இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒருபுறம் பணக்கார குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்தி, மறுபுறம் ஏழை குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடி. இதில் யார் வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. நீங்கள் எங்களுக்கு 400 இடங்களை தாருங்கள், இந்த அரசியல் சாசனத்துக்கு எதிரான இடஒதுக்கீட்டை பா.ஜனதா ரத்து செய்யும்.

காங்கிரஸ் கட்சி போபர்ஸ் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான ஊழலில் ஈடுபட்டது. உரம், அரிசி, காமன்வெல்த் விளையாட்டுகள் என ஏராளமான ஊழல்களை தங்கள் ஆட்சியில் செய்துள்ளது. விவசாயம், விளையாட்டு, ராணுவம் ஆகிய 3 துறைகளில் செய்த ஊழல்கள் மூலம் தங்கள் கஜானாவை நிரப்பியது. மோடி அரசு ரூ.20 லட்சம் கோடி அளவிலான உணவு பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்தது. இது சுதந்திரத்துக்கு பிறகு எந்த அரசும் செய்யாதது" என்று அமித்ஷா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com