"உண்மையில் என் உடல்நிலை மீது அக்கறை இருந்தால்...." பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பளீர் பதில்!

நவீன் பட்நாயக் உடல்நலம் குன்றியதன் பின்னணியில் சதி இருப்பதாக பரப்புரை ஒன்றில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
"உண்மையில் என் உடல்நிலை மீது அக்கறை இருந்தால்...." பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பளீர் பதில்!
Published on

புவனேஷ்வர்,

ஒடிசாவின் பரிபாடாவில் நடந்த பேரணியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கடந்த ஒரு ஆண்டாக முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவரால் எந்த ஒரு வேலையையும் சுயமாக செய்ய முடியாது என அவரோடு பணியாற்றுபவர்கள் கூறுகிறார்கள்.

இதற்குப் பின்னால் சதி இருக்குமோ என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள். ஒடிசாவில் பா.ஜனதா வெற்றி பெற்றதும், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் மாநிலத்தின் முதல்-மந்திரியாக்குவோம். அடுத்ததாக, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து விசாரணை மேற்கொள்ள ஜூன் 10-க்குப் பிறகு ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்படும்" என்று வர் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், "நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசி உள்ளார். என் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி மிகவும் அக்கறை கொண்டிருந்தால், பொதுவெளியில் அவர் பேசுவதற்கு முன்னால், நல்ல நண்பரான எனக்கு போன் செய்து எனது உடல்நிலை குறித்து விசாரித்திருக்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளாக எனது உடல்நிலை குறித்து ஒடிசாவில் இருக்கும் பா.ஜனதாவினரும், டெல்லியில் உள்ள பா.ஜனதாவினரும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், நான் பூரண ஆரோக்கியத்துடன் உள்ளேன். கடந்த ஒரு மாதமாக ஒடிசா மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறேன் என்பதை பிரதமர் மோடிக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர் மோடி கமிட்டி அமைக்க விரும்பினால், எனது உடல்நிலை குறித்த வதந்திகளை பரப்புவோரை கண்டுபிடிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன். பிரதமர் மோடி இதுபோன்ற வதந்திகளை நம்புவதற்கு பதிலாக, சிறப்பு அந்தஸ்து குறித்த ஒடிசாவின் கோரிக்கை மீது கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். ஏனென்றால், அது ஒடிசா மக்களுக்கு உதவியாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com