

ஜெய்ப்பூர்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் பந்திகுய் நகரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், "பிரதமர் மோடி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். பொய் வாக்குறுதிகள் அளித்துள்ளார். இதனால் அவரது பேச்சுகள் வெற்று கூச்சலாக எனக்கு தெரிகிறது.
அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி பா.ஜனதா பேசி வருகிறது. ஏனென்றால், மக்களின் உரிமைகளை பறிப்பதற்குத்தான் இந்த பிரச்சினையை எழுப்பி வருகிறது. என்ன நடந்தது என்று நீங்கள் உணரக்கூட முடியாதவகையில் அதைச் செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். பொதுக்கூட்டங்களில் அரசியல் சட்டம் பற்றி மோடி பேசுகிறார். ஆனால், தன் ஆட்களை அழைத்து, மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி பேச வைக்கிறார்" என்று அவர் பேசினார்.
மேலும், ஆல்வார் நகரில் பிரியங்கா வாகன பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் அவருடன் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சென்றனர்.