'சி.ஏ.ஏ. குறித்து காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் பொய்களை பரப்புகிறார்கள்' - பிரதமர் மோடி

காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்தவர்கள் சி.ஏ.ஏ. குறித்து பொய்களை பரப்பி வருவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
'சி.ஏ.ஏ. குறித்து காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் பொய்களை பரப்புகிறார்கள்' - பிரதமர் மோடி
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அசாம்கர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியினர் அகதிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது;-

"குடியுரிமை திருத்தச் சட்டம்(சி.ஏ.ஏ.) மூலம் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. மதத்தின் அடிப்படையில் ஏற்பட்ட பிரிவினை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நம் நாட்டில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தியின் பெயரை பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்கள் மகாத்மா காந்தியின் வார்த்தைகளை மறந்துவிடுகின்றனர். நமது அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர் எப்போது வேண்டுமானாலும் நம் நாட்டிற்கு வரலாம் என்பதை மகாத்மா காந்தியே உறுதி செய்துள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்கள் மதத்தையும், கலாச்சாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் கட்சி அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கிகள் கிடையாது. காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் சி.ஏ.ஏ. குறித்து பொய்களை பரப்பி, நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com