மாத சம்பளதாரர்கள் இடையே பதற்றம் ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி - தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்

பா.ஜனதா தவறான செய்திகளை பரப்பி வருவதாக தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தலைமை தேர்தல் கமிஷனருக்கு அகில இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஒரு புகார் மனு அனுப்பி வைத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 6-ந் தேதி, ஐதராபாத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, சமூகத்தில் சமமான வளர்ச்சியை உறுதி செய்ய பொருளாதார, சமூக நீதிக்கு காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டிருப்பதாக ராகுல்காந்தி பேசினார்.

ஆனால் அந்த பேச்சை வேண்டும் என்றே திசைதிருப்பி பிரசாரம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் சொத்துகளை பகிர்ந்து அளித்து விடும் என்று பா.ஜனதா பொய்ச்செய்தி பரப்பி வருகிறது.

மாத சம்பளதாரர்களுக்கு ஒருவர் 'வாட்ஸ்அப்' மூலம் வதந்தி பரப்பி உள்ளார். அதில், ''பொதுமக்களின் மூன்றில் இரண்டு பங்கு சொத்துகளை பறிமுதல் செய்து, ஜவகர்லால் நேரு தேசிய சொத்து மறுபங்கீட்டு திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு பகிர்ந்து அளிப்பதாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது'' என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பொய்ச்செய்தி அடிப்படையில் ஒரு முன்னணி நாளிதழில் கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட வதந்தி, பொய். மாத சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இடையே குழப்பம், பதற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தி, அவர்களை காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க செய்ய முயற்சி நடக்கிறது. ஆகவே, பா.ஜனதா மீது தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுத்து, இத்தகைய வதந்தி பரப்பப்படுவதை நிறுத்த வேண்டும். மேலும், டெல்லி போலீசிலும் புகார் அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com