வி.கே.பாண்டியன் என் அரசியல் வாரிசு அல்ல.. ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பளிச் பதில்

வி.கே.பாண்டியன்தான் பின்னாலிருந்து அரசை இயங்குவதாகவும், தனக்கு பிறகு அவர்தான் என்று வெளிவரும் தகவல்கள் குறித்த கேள்விக்கு நவீன் பட்நாயக் பதிலளித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புவனேஷ்வர்,

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளது.

அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு 4,5,6,7வது கட்டம் என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இறுதிகட்டமாக ஜகத்சிங்பூர், கேந்த்ராபாரா, பாலசோர் உள்ளிட்ட 6 மக்களவைத் தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகிறது.

இங்கு 2000-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்-மந்திரியாக இருக்கும் நவீன் பட்நாயக்கை வீழ்த்த பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில், முக்கியமாக நவீன் பட்நாயக் அரசை பின்னாலிருந்து வி.கே.பாண்டியன் நடத்துவதாகவும், மீண்டும் பிஜு ஜனதா தளம் வெற்றிபெற்றால் வி.கே.பாண்டியன் முதல்-மந்திரியாக்கப்படுவார் என்றும், தமிழர் ஒடிசா முதல்-மந்திரியாக அனுமதிக்கக் கூடாது என்றும் பா.ஜனதா பிரசாரம் செய்துவந்தது.

மேலும் பிரதமர் மோடி, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசமானதுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும், அரசை பின்னாலிருந்து இயக்கும் லாபிதான் இதற்குக் காரணமா என்றும் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, `மோடிக்கு என்மீது உண்மையில் அக்கறையிருந்தால் எனக்கு போன் செய்யட்டும். கடந்த 10 ஆண்டுகளாகவே இது போன்ற வதந்திகள் பா.ஜனதாவில் இருந்து பரப்பப்படுகிறது' என நவீன் பட்நாயக் நேற்று பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், வி.கே.பாண்டியன் தன் அரசியல் வாரிசு கிடையாது என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "இது மிகவும் அபத்தமானது என்று ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன். இது பழைய குற்றச்சாட்டு, இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. ஒடிசாவிலும் தேசிய அளவிலும் பா.ஜனதாவின் புகழ் குறைந்து வருவதால், அவர்களிடம் அதிகரித்துவரும் விரக்தியிலிருந்து இத்தகைய குற்றச்சாட்டுகள் வருகின்றன

அதோடு, எனக்குப் பிறகு யார் என்ற எந்த அரசியல் வாரிசு திட்டமும் இல்லை. ஒடிசா மக்கள்தான் அதை முடிவு செய்வார்கள். நாங்கள் வெற்றிபெற்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நிச்சயம் நானே முதல்-மந்திரியாக இருப்பேன் என்று நம்புகிறேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் தலைவர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து கட்சியை வழிநடத்தி வருகிறேன். நன்றாக நடத்திவருகிறேன் என்றே நினைக்கிறேன், அவ்வாறே தொடர்வேன்" என்று நவீன் பட்நாயக் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com