அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் இடம்பெற வேண்டும் - தேர்தல் கமிஷன் உத்தரவு

அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அவற்றை அச்சிட்ட அச்சகம் மற்றும் வெளியீட்டாளரின் பெயர் இடம்பெற வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் வைக்கும் பேனர்களில் அச்சகத்தின் பெயர் இடம்பெற வேண்டும் - தேர்தல் கமிஷன் உத்தரவு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், பதாகைகள் மூலம் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த விளம்பர பொருட்களில் அவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ, வெளியீட்டாளரின் பெயரோ இடம்பெறுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. ஆம் ஆத்மி கட்சி சார்பில் தேர்தல் கமிஷனிடம் இதுதொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விளம்பர பலகைகள், பேனர்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பொருட்களை அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர் இல்லாமல் வெளியிட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127ஏ பிரிவு தடை விதிக்கிறது. ஆகவே, அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும்.

அப்போதுதான் தேர்தல் பிரசாரத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முடியும். தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்த முடியும். பேனரில் உள்ள கருத்துகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால், அதற்கான பொறுப்பை சுமத்த முடியும்.

அரசியல் விளம்பரங்கள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி மாநகராட்சி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஒரு வேட்பாளர் அல்லது கட்சிக்கு ஆதரவாக விளம்பரம் வெளியிடலாம். ஆனால் பிற வேட்பாளருக்கு எதிராக விளம்பரம் வெளியிட தடை உள்ளது.

விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகே விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும். அரசு செலவில், ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com