அரசியல் தலைவர்களின் சில பதிவுகளை நீக்க எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் முடியும் வரை பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரசியல் தலைவர்களின் சில பதிவுகளை நீக்க எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.

இந்த நிலையில், பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்-மந்திரி சம்ராத் சௌத்ரி ஆகியோரின் 2 பதிவுகளை நீக்கக்கோரி, எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது.

மேலும், இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு எக்ஸ் நிர்வாகம் பகுதியளவு மட்டுமே உடன்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 4 பதிவுகளையும் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ள எக்ஸ் நிர்வாகம், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியில் வெளியிடுவதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com