காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்... விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி - ராகுல் காந்தி

பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

மராட்டியத்தின் பந்தாரா மாவட்டத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

வெறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்களும், கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி.யை செலுத்தும் நிலை உள்ளது.

நாட்டின் எதிர்காலத்துக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமானது ஆகும். எனவே மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் இது நடத்தப்படும். தன்னை பிற்படுத்தப்பட்டவர் என கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, அந்த பிரிவினருக்காக கடந்த 10 ஆண்டுகளில் செய்தது என்ன? என்பதை கூற வேண்டும்.

அவரது தலைமையிலான மத்திய அரசு வெறும் ஒருசில தொழிலதிபர்களுக்காக மட்டுமே உழைக்கிறது. சாதாரண மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நாட்டின் 50 சதவீத மக்கள் வைத்திருக்கும் சொத்துக்கு சமமாக வெறும் 22 பேர் சொத்துகளை வைத்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி வெறும் மதத்தை பற்றி மட்டுமே பேசுகிறார். சாதிகளுக்கு இடையே, மதத்தினருக்கு இடையே பகையை உருவாக்க முயற்சிக்கிறார்.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன. தற்போது சாலைகள், பாலங்கள், நிலக்கரி சுரங்கங்கள், மின் நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அனைத்தையும் அவர் வைத்திருக்கிறார். கொரோனா பெருந்தொற்று நாட்களில் சாதாரண மக்கள் மருத்துவ உதவிக்காக வேண்டினார்கள். அவர்களிடம் பாத்திரங்களை தட்டுமாறும், செல்போன் டார்ச் அடிக்குமாறும் மோடி கேட்டுக்கொண்டார்" என்று ராகுல் காந்தி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com