தென்னிந்தியாவில் பா.ஜ.க. எத்தனை தொகுதிகளில் வெல்லும் - ரேவந்த் ரெட்டி பதில்

தென்னிந்தியாவில் மொத்தம் 130 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில், அதில் 15க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவில் பா.ஜ.க. எத்தனை தொகுதிகளில் வெல்லும் - ரேவந்த் ரெட்டி பதில்
Published on

ஐதராபாத்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.

2024 மக்களவை தேர்தலில் தென் இந்தியாவில் வளர வேண்டும் என்பதில் பா.ஜ.க. முனைப்பாக இருக்கிறது. இதன் காரணமாகத் தென்னிந்தியாவுக்குப் பிரதமர் மோடியே நேரடியாகப் பல முறை விசிட் அடித்துள்ளார். குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்திற்கு கடந்த சில வாரங்களில் மட்டும் பிரதமர் மோடி 10 முறைக்கு மேல் வந்து சென்றுள்ளார்.

இதனால் தென்னிந்தியாவில் பாஜக கணிசமான இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாகத் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியிடம் சில முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டது. தென்னிந்தியாவில் ஒட்டுமொத்தமாக சுமார் 130 இடங்கள் உள்ளன.அதில் பா.ஜ.க. அதிகபட்சமாக பா.ஜ.க. 12-15 இடங்களில் மட்டுமே வெல்லப் போகிறது. மீதமுள்ள 115-120 இடங்களில் நிச்சயம் இந்தியா கூட்டணியே வெல்லும் என்றார்.

அடுத்து தெலுங்கானா மாநிலம் குறித்துப் பேசிய ரேவந்த் ரெட்டி, எங்கள் தெலுங்கானாவில் மொத்தம் 17 மக்களவை சீட்கள் இருக்கும் நிலையில், அதில் குறைந்தது 14 இடங்களில் இந்தியா கூட்டணிதான் வெல்லும். அதில் சந்தேகமே வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். நாடு முழுக்க 400 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை இலக்காக வைத்து பா.ஜ.க. செயல்பட்டு வருவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ரேவந்த் ரெட்டி,

2023 தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் கே.சி.ஆர். எப்படி பிரசாரம் செய்தாரோ அதேபோலதான் இதுவும்.. கே.சி.ஆர். 100 இடங்களில் வெல்வோம் எனக் கூறினார். ஆனால் அவரால் வெறும் 39 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. அதேபோலதான் பா.ஜ.க. இப்போது செய்கிறது. அவர்கள் மக்களைக் குழப்ப முயல்கிறார்கள். ஆனால், வாக்காளர்கள் பா.ஜ.க.வுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com