'எனது அடுத்த 5 ஆண்டுகளை ஹாமிர்பூர் தொகுதிக்காக அர்ப்பணிப்பேன்' - அனுராக் தாக்கூர்

இமாச்சல பிரதேசத்தின் ஹாமிர்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அனுராக் தாக்கூர் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
Anurag Thakur leads in Hamirpur constituency
Published on

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் போட்டியிட்டார். இன்று மக்களவை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வருகிறது. பல இடங்களில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் ஹாமிர்பூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அனுராக் தாக்கூர் சுமார் 1 லட்சத்து 77 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் தொடர்ந்து 5-வது முறையாக மக்களவை தேர்தலில் அனுராக் தாக்கூர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இதேபோல் இமாச்சல பிரதேசத்தின் காங்ரா, மண்டி மற்றும் சிம்லா உள்ளிட்ட தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

இது குறித்து அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஹாமிர்பூர் தொகுதி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். 5-வது முறையாக என்னை ஆசீர்வதித்த இமாச்சல பிரதேசம் மற்றும் ஹாமிர்பூர் தொகுதி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அடுத்த 5 ஆண்டுகளை ஹாமிர்பூர் தொகுதிக்காக அர்ப்பணிப்பேன். மேலும் இமாச்சல பிரதேச மக்களின் நலனுக்காக பாடுபடுவேன்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com