சட்டத்தை பயன்படுத்துவதில் மோடி பேராசிரியர் - ப.சிதம்பரம்

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் பேராபத்து என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை பயன்படுத்துவதில் மோடி பேராசிரியர் - ப.சிதம்பரம்
Published on

சிவகங்கை,

பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் பேராபத்து என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை, காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது,"நாங்கள் ஆட்சியில் இருந்தபோது எந்த முதல்வரையும் கைது செய்யவில்லை. இப்படி எல்லாம் சட்டத்தை பயன்படுத்தலாம் என எங்கள் புத்திக்கு எட்டவில்லை.

சட்டத்தை பயன்படுத்துவதில் மோடி பேராசிரியர்; நாங்கள் கத்துக்குட்டி தான். இதே காரியத்தை காங்கிரஸ் செய்திருந்தால் மோடியும் சிறையில் இருந்திருப்பார். அதை நாங்கள் செய்யவில்லை. காங்கிரஸ் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள கட்சி. அதனால் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை.

நான் சாதியை மறுத்தவன். சாதிக்கு அப்பால் திருமணம் செய்து கொண்டேன். எனது மகனும், அதேபோல் திருமணம் செய்தார். எனது பேத்தியும் அதேபோல் திருமணம் செய்து கொள்வார் என நம்புகிறேன். தேர்தலில் சாதி உணர்வை தூண்டக் கூடாது. வெற்றி, தோல்வி என்பது இயற்கைதான். வெற்றியை பெற சாதியை பற்றி பேச வேண்டாம்.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறிய பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் பேராபத்து கொண்டவை. பல்வேறு பழக்கம், கலாச்சாரம், மதம் கொண்ட இந்தியாவில் எப்படி எல்லோருக்கும் பொதுவான சட்டத்தை உருவாக்க முடியும்? நாங்கள் நாடாளுமன்றத்தில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம்.

மோடி அரசு மீது அ.தி.மு.க. வேட்பாளர் நிறையும் சொல்ல மாட்டார்; குறையும் சொல்லமாட்டார். அப்புறம் எதற்கு பழனிசாமி கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது" இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com