நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 37 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்

நாடாளுமன்றத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 37 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக மக்கள் ஆய்வு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 37 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்
Published on

சென்னை,

மக்கள் ஆய்வு அமைப்பின் இயக்குனர் ராஜநாயகம், தேர்தல் காலங்களில், அரசியல் கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவீதம் பெறும்?, மக்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பது போன்ற பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் தொடக்கநிலையில் இருக்கும் சூழலில், அரசியல் கட்சிகளுக்கு மக்களின் ஆதரவு எந்த அளவு இருக்கிறது?, வாக்காளர்களின் இறுதிநேர எதிர்பார்ப்பு என்ன? கூட்டணிகள் பிடிக்கக்கூடிய சாத்தியமான தொகுதிகள் எவை? என்பது போன்ற பல்வேறு கருத்துக்கணிப்புகளை மக்கள் ஆய்வு வாக்காளர்களிடம் நடத்தி, அதன் முடிவுகளை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று வெளியிட்டது.

இந்த கருத்துக்கணிப்பு கடந்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி முதல் கடந்த 1-ந்தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 4 ஆயிரத்து 485 வாக்காளர்களிடம் நேரடி சந்திப்பு மூலம் பெறப்பட்டிருக்கிறது.

கருத்துக்கணிப்பு விவரம் தொடர்பாக மக்கள் ஆய்வு இயக்குனர் ராஜநாயகம், துணைஇயக்குனர் சிறுமலர் ஜெகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் தொடக்கநிலை பிரசாரச்சூழலில், தற்போது வாக்காளர்கள் வாக்களிப்பதாக இருந்தால், தி.மு.க. கூட்டணிக்கு 41.3 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 24.2 சதவீதம் பேரும், பா.ஜனதா அணிக்கு 17.1 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சி 12.8 சதவீதம் பேரும், பிற கட்சிகளுக்கு 2.4 சதவீதம் பேரும், நோட்டாவுக்கு 2.2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தொகுதி வாரியாக பார்க்கும்போது, பிரசாரத்தின் தொடக்க நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு 37 தொகுதிகளும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வெற்றிவாய்ப்பு சாதகமாக உள்ளன.

இதில் தி.மு.க. முன்னணி வகிக்கும் என்ற கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள 37 தொகுதிகளில் 9 தொகுதிகளில் வாக்குகளின் வேறுபாடு என்பது வெறும் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. எனவே தொடரும் களநிலவரப்போக்குகளுக்கு ஏற்ப, இறுதிமுடிவுகள் மாறலாம். அப்படி மாறும்பட்சத்தில் தி.மு.க. கூட்டணிக்கு 28 தொகுதிகளும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதா கூட்டணிக்கு 4 தொகுதிகளும் கிடைக்கலாம்.

இதுதவிர தேர்தல் ஆணையத்தின் சோதனை செயல்பாடுகள் என்பது சாமானிய மக்களை துன்புறுத்துவதாக உள்ளது என்ற கண்டனம் மாநிலம் முழுவதும் அழுத்தமாக வெளிப்படுகிறது.

குறிப்பாக, பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகை குறித்த கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட சிறப்பு தரவுகளை ஆராயும்போது, வாக்காளர் மீது புள்ளியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை அவரின் வருகை ஏற்படுத்தவில்லை என்பதை காட்டுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாது, வரஇருக்கக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வர விரும்பக்கூடிய கட்சிகள் எவை? மற்றும் முதல்-அமைச்சராக வரவிரும்பும் ஆளுமைகள் யார்? என்பது குறித்தும் வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், ஆட்சி அமைக்க விரும்பும் கட்சிகளாக தி.மு.க.வுக்கு 31.8 சதவீதம் பேரும், அ.தி.மு.க.வுக்கு 21.5 சதவீதம் பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 16.2 சதவீதம் பேரும், தமிழக வெற்றிக் கழகத்துக்கு 15.2 சதவீதம் பேரும், பா.ஜனதாவுக்கு 10.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேபோல், 2026-ல் முதல்-அமைச்சராக வருவதற்கான ஆளுமைகளாக மு.க.ஸ்டாலினுக்கு 30.7 சதவீதம் பேரும், எடப்பாடி பழனிசாமிக்கு 21.7 சதவீதம் பேரும், சீமானுக்கு 15.5 சதவீதம் பேரும், விஜய்க்கு 14.5 சதவீதம் பேரும், அண்ணாமலைக்கு 11.3 சதவீதம் பேரும் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், சினிமாவும், அரசியலும் கலந்த தமிழக அரசியல் பண்பாட்டு பின்புலத்தில், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ஏதேனும் ஒரு திரைப்பிரபலத்தை பிடித்துள்ளது. அந்தவகையில் 19.8 சதவீதம் பேர் விஜயையும், 12.8 சதவீதம் பேர் ரஜினியையும், 12.6 சதவீதம் பேர் அஜித்தையும், 3.6 சதவீதம் பேர் சூர்யாவையும், 3.3 சதவீதம் பேர் கமலையும் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 19.5 சதவீதம் பேர் யாருமில்லை என்ற தகவலையும் பதிவு செய்திருக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com