துண்டு சீட்டு உதவி இல்லாமல் ஒடிசாவின் மாவட்டங்கள் பெயரை கூற முடியுமா..? நவீன் பட்நாயக்குக்கு பிரதமர் மோடி சவால்

தலைநகரங்களின் பெயரை தெரியாத முதல்-மந்திரியால், மக்களின் துயரங்களை புரிந்து கொள்ள முடியுமா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புவனேஸ்வர்,

பிஜு ஜனதாதளம் ஆளும் ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு நேற்று பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

போலாங்கிர், புல்பானி, கந்தமால் என அடுத்தடுத்து பிரசார கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி, மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை கடுமையாக தாக்கி பேசினார்.

இதுதொடர்பாக புல்பானி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், "உயர் பொறுப்பு வகிக்கும் எந்தவொரு தனிநபரையும் விமர்சிக்கும் அல்லது அவதூறு செய்யும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால் ஒடிசாவின் தற்போதைய சூழ்நிலையைப் பார்த்து மிகவும் வருந்துகிறேன்.

பல ஆண்டுகளாக இந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் இருந்து வருகிறார். அவருக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். அதாவது துண்டு சீட்டு உதவி இல்லாமல் ஒடிசாவின் மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்கள் பெயரை கூற முடியுமா? என கேட்கிறேன்.

மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களின் பெயரை தெரியாத முதல்-மந்திரியால் இங்குள்ள மக்களின் துயரங்களை புரிந்து கொள்ள முடியுமா? நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று சாதனை படைக்கும்.

ராகுல் காந்தி கடந்த 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களில் பேசியதையே இப்போதும் பேசி வருகிறார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 10 சதவீத இடங்களை கூட பெற முடியாது. 50-க்கும் குறைவான தொகுதிகளை பெற்று மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போகும்.

பாகிஸ்தானிடம் அனுகுண்டு இருப்பதாக நாட்டு மக்களை காங்கிரஸ் கட்சி அச்சுறுத்தி வருகிறது. ஆனால் தங்கள் அணுகுண்டுகளை பராமரிக்க காசு இல்லாத நிலையில்தான் பாகிஸ்தான் இருக்கிறது" என்று பிரதமர் மோடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com