

மும்பை,
மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட இருக்கும் நிலையில், தற்போது மராட்டிய மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதனிடையே மராட்டிய மாநிலத்தில் தற்போது கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அங்குள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை.
இந்த சூழலில், மராட்டிய மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் எனக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு மராட்டிய மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை வழங்குவதற்காக தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் தளர்த்த வேண்டும் என அந்த கடிதத்தில் மராட்டிய மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.