கூட்டணிக்கு ஆதரவு, ஆனால் நிபந்தனை... ஆட்சியமைக்கும் முன் பா.ஜ.க.வுக்கு பல சவால்கள்

ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மத்திய மந்திரி சபையில் இடம் வேண்டும் என கேட்டுள்ளன.
கூட்டணிக்கு ஆதரவு, ஆனால் நிபந்தனை... ஆட்சியமைக்கும் முன் பா.ஜ.க.வுக்கு பல சவால்கள்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி என இரு பெரும் தேசிய கட்சிகள் எதிரெதிராக களம் கண்டன.

இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ந்தேதி நடந்தது. இதில், பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாக உள்ளது. எனினும், தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

இதனை தொடர்ந்து மத்தியில் ஆட்சியமைக்கும் பணியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இறங்கியது. ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி, பதவி விலகல் கடிதம் வழங்கினார். 17-வது மக்களவை கலைக்கப்பட்டது.

பெரும்பான்மையை பெற பா.ஜ.க. தவறிய நிலையில், நிதீஷ் குமார் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் மத்தியில் ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவர் தலைமையிலான கட்சிகளின் ஆதரவு தேவையாக உள்ளது. அவர்கள், கூட்டணிக்கு தங்களுடைய முழு ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

எனினும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தபோதும், சில நிபந்தனைகளை விதித்துள்ளன. இதன்படி, போக்குவரத்து, ஐ.டி., வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் நீர்வள துறை போன்றவற்றை தரும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுள்ளார் என கூறப்படுகிறது.

இதேபோன்று, பீகார் முதல்-மந்திரி மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரான நிதீஷ் குமார், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வகுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். 3 கேபினட் அந்தஸ்து மற்றும் 2 இணை மந்திரிகள் என 5 மத்திய மந்திரி பதவிகள் வேண்டும் என்றும் நிதீஷ் விரும்புகிறார்.

இதேபோன்று, 2 எம்.பி.க்களை வைத்துள்ள மதசார்பற்ற ஜனதா தளமும் மந்திரி சபையில் இடம் கேட்டு பா.ஜ.க.வை வலியுறுத்தி வருகிறது. அக்கட்சி வேளாண் துறை வேண்டும் என கேட்டுள்ளது.

கூட்டணிக்கு ஆதரவை வெளிப்படுத்திய, முன்னாள் மத்திய மந்திரி ராம் விலாஸ் பஸ்வானின் மகனான, சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தியும் நிபந்தனை விதித்துள்ளது என கூறப்படுகிறது. அக்கட்சி, பீகாரில் 5 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.

இதனால், பா.ஜ.க. மத்தியில் ஆட்சியமைப்பதற்கு முன்பே, கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக இதுபோன்ற பல சவால்களை எதிர்கொள்ள கூடிய நிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com