பரபரக்கும் மக்களவை தேர்தல்: மணிப்பூரின் தற்போதைய பிரசார களம் எப்படி..?

தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் மணிப்பூர் மாநிலம் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள் இன்றி களையிழந்து காணப்படுகிறது.
பரபரக்கும் மக்களவை தேர்தல்: மணிப்பூரின் தற்போதைய பிரசார களம் எப்படி..?
Published on

இம்பால்,

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 18-வது மக்களவை தேர்தல் வருகிற 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவுக்கு ஒட்டுமொத்த நாடும் உற்சாகமாக தயாராகி வருகிறது.

குறிப்பாக ஏப்ரல் 19-ந் தேதி முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரம், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் என தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது.

அதே சமயம் 11 மாதங்களுக்கும் மேலாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ள வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் தேர்தல் உற்சாகம் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.

அங்குள்ள 2 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அந்த வகையில் முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் அங்கு இதுவரை வேட்பாளர்களின் பிரசாரம் இல்லை; பொதுக்கூட்டங்கள் இல்லை; போஸ்டர்கள் இல்லை; ஜனநாயக திருவிழாவை வரவேற்கும் எந்த காட்சிகளும் தென்படவில்லை.

ஆளும் பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா போன்ற முக்கிய பிரமுகர்களும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிற முக்கிய தலைவர்களும் நட்சத்திர பேச்சாளர்களாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அவர்களில் யாரும் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.

மாநிலத்தில் பிரசார நடவடிக்கைகளுக்கு அதிகாரப்பூர்வ கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றும் மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்தாலும், பதற்றமான சூழ்நிலையை மேலும் மோசமாக்குவதை தவிர்க்க நிதானமான முறையில் பிரசாரத்தை மேற்கொள்ள அரசியல் கட்சிகளை வலியுறுத்துகிறது.

அதே சமயம் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் தனித்துவமான பிரசார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி அவர்கள் பொது இடங்களில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு பதிலாக தங்களின் வீடு அல்லது கட்சி அலுவலகங்களில் கூட்டத்தை நடத்தி ஆதரவு திரட்டுகின்றனர். மேலும் தங்களின் ஆதரவாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகினற்னர்.

மணிப்பூரில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கலவரம் நடந்து வருவதும், இந்த கலவரத்தில் 219 பேர் பலியான நிலையில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com