நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம்: பிரதமர் மோடி

நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் காணப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்புகளில் பல, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய அளவில் வெற்றியை பெறும் என தெரிவித்து இருந்தது. இதில், பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே வெற்றி கிடைக்கும் என்றும் இந்த கூட்டணி 350-க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அது தவறாகி போயுள்ளது. ஆளும் பா.ஜ.க., 272 என்ற பெரும்பான்மைக்கான வெற்றியை தனிக்கட்சியாக பெற முடியாமல் போனது. எனினும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தயாராகி வருவதுடன், 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்த சூழலில், அவர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு வருகை தந்திருக்கிறார். அவர், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர் பேசும்போது, மக்களின் அன்புக்கு நான் தலைவணங்குகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக செய்த மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து, மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வோம். மக்கள் 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

இது இந்திய வரலாற்றில் மிக பெரிய சாதனை. வெற்றிக்காக உழைத்த பா.ஜ.க. தொண்டர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com