வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? சத்யபிரத சாகு விளக்கம்

வாக்கு சதவீதத்தில் ஒருசிலர் மட்டுமே செயலியில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார்.
வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? சத்யபிரத சாகு விளக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந்தேதி காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஆனால் ஒரு சில தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கி ஓட்டுப்பதிவு அளிக்கப்பட்டதால் இரவு 7 மணி வரை தொடர்ந்தது. இதனால் அன்று இரவு நிலவரப்படி உத்தேச தகவல்கள் வெளியிடப்பட்டன.

அதன்படி தோராயமாக 72.09 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த தேர்தலை விட 2.5 சதவீதம் குறைந்து 69.46 சதவீதம் வாக்குப்பதிவானதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுகள் இறுதி செய்யப்பட்டு 69.72 சதவீதம் பதிவானதாக இறுதியாக தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் நடந்த மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவித்ததில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் தவறு நடைபெற்றது.

செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை.

ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள். இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது.

தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்து போட்டு கொடுக்கும் தகவல் வர கால தாமதம் ஆகும் என்பதால் செயலி மூலமாக அப்டேட் செய்தோம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து அக்டோபரிலேயே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக கேஸ் பை கேஸ் விசாரணை நடத்த வேண்டும்.

ஒரு வாக்காளர் நீண்டகாலமாக அவரது முகவரியில் இல்லாவிட்டால் பட்டியலில் பெயர் இல்லாமல் போகலாம்.

1996-ல் தரப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடியாகும். புதிய அட்டைத்தான் தேவையென்று இல்லை.

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, சரிபார்க்க பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாராவாரம் அரசியல் கட்சிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும்.

தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு கேட்டு அதிகாரிகள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் இன்று வரை ரூ.1,308 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com