

திருச்சி,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. நடிகர் விஜய்யின் தவெக தனித்து போட்டியிடுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.நேற்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பெரம்பூர் தொகுதியில் தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார்.
பிரசாரத்தின்போது ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டனர். பெரம்பூரில் பிரசாரத்தை முடித்த பிறகு கொளத்தூரில் பிரசாரம் செய்தார். பிரசாரம் செய்த இடங்களில் கூட்டம் கட்டுங்கடங்காமல் கூடவே அடுத்ததாக விஜய் பிரசாரம் செய்ய இருந்த வில்லிவாக்கம் தொகுதி பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. விஜய்யின் வாகன அணிவகுப்பிற்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வில்லிவாக்கம், அண்ணா நகர் தொகுதிகளில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்தநிலையில், நாளை மறுநாள் திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து திருச்சியில் பிரசாரமும் மேற்கொள்கிறார். இதற்காக தவெக தரப்பில் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் பிரசாரத்திற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறை விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. போதிய ஏற்பாடுகளை செய்ய தேர்தல் அதிகாரிகளும் போலீசாருடம் ஈடுபட்டுள்ளனர்.