சீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா, கெர்பர் ஆகியோர் அசத்தல் வெற்றிபெற்றனர்.
Published on

பீஜிங்,

பீஜிங்கில் நடந்து வரும் சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒசாகா, கெர்பர் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

மொத்தம் ரூ.60 கோடி பரிசுத்தொகைக்கான சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் மகுடம் சூடும் வீராங்கனை ரூ.11 கோடியை பரிசாக அள்ளுவார். நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சீனாவின் வாங் குயாங், முன்னாள் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோவுடன் (லாத்வியா) மோதினார். இடதுகையில் ஏற்பட்ட காயத்தால் ஆஸ்டாபென்கோ தடுமாற, அதை சாதகமாக பயன்படுத்தி வாங் குயாங் அமர்க்களப்படுத்தினார். அவர் எதிராளிக்கு ஒரு புள்ளி கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 55 நிமிடங்கள் மட்டுமே நடந்தது.

விம்பிள்டன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தன்னை எதிர்த்த கார்லா சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) 7-6 (4), 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3-வது சுற்றை எட்டினார். கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), சிபுல்கோவா (சுலோவக்கியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

அமெரிக்க ஓபன் சாம்பியனான ஜப்பான் இளம் புயல் நவோமி ஒசாகா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் டேனியலி கோலின்சை (அமெரிக்கா) 53 நிமிடங்களில் பந்தாடினார். அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள் மூலம் ஒசாகா, சிங்கப்பூரில் வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடக்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 3-வது வீராங்கனையாக தகுதி பெற்றார். ஏற்கனவே சிமோனா ஹாலெப் (ருமேனியா), கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் இந்த கவுரவமிக்க போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com