ஆஷஸ் 2வது டெஸ்ட்; முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 325 ரன்னில் ஆல் அவுட்..!

ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 325 ரன்னில் ஆல் அவுட் ஆனது, இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

லண்டன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. துணை கேப்டன் ஸ்டீவன் சுமித் (85 ரன்), விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (11 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. அலெக்ஸ் கேரி 22 ரன்னிலும், அடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க் 6 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவன் சுமித் பவுண்டரி அடித்து தனது 32-வது சதத்தை நிறைவு செய்தார்.

சிறிது நேரத்தில் ஸ்டீவன் சுமித் 110 ரன்களில் (184 பந்து, 15 பவுண்டரி) கேட்ச் ஆனார். அதைத் தொடர்ந்து நாதன் லயன் 7 ரன்னிலும், ஹேசில்வுட் 4 ரன்னிலும் வீழ்ந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 100.4 ஓவர்களில் 416 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் கம்மின்ஸ் 22 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆலி ராபின்சன், ஜோஷ் டங்கு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் இங்கிலாந்தின் முதல் இன்னிங்சை ஜாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் தொடங்கினர். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் இங்கிலாந்துக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஸ்கோர் 91-ஐ எட்டிய போது கிராவ்லி (48 ரன்) நாதன் லயனின் சுழற்பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அடுத்து பென் டக்கெட்டுடன், ஆலி போப் இணைந்து மேலும் வலுசேர்த்தார். அணியின் ஸ்கோர் 188 ஆக உயர்ந்த போது ஆலி போப் 42 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஜோ ரூட் ஒரு ரன்னில் சிக்கினார். ஆனால் அது 'நோ-பால்' என்று அறிவிக்கப்பட்டதால் தப்பிய ஜோரூட் அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறினார்.

அவர் 10 ரன்னில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுபக்கம் சதத்தை நெருங்கிய பென் டக்கெட் 2 ரன்னில் 3-வது சதத்தை நழுவ விட்டார். அவர் 98 ரன்களில் (134 பந்து, 9 பவுண்டரி) நடையை கட்டினார்.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 61 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி புரூக் 45 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருக்கிறார்கள். இன்னும் 138 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இன்று தொடங்கியது.

தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் டக்கட் 98 ரன்னும், ஹாரி புரூக் 50 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

ஆஸ்திரேலிய தரப்பில் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் களம் இறங்கினர். அந்த அணி 12 ரன்கள் எடுத்த நிலையில் உணவு இடைவேளை விடப்பட்டது. இதுவரை மொத்தமாக ஆஸ்திரேலிய அணி 103 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com