100-வது டெஸ்ட்: அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ. மற்றும் ரோகித் செய்த மரியாதை

இந்திய வீரர் அஸ்வின், தனது 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கியுள்ளார்.
Published on

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டி அஸ்வினுக்கு 100-வது சர்வதேச டெஸ்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்திய அணி சார்பாக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 14-வது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியின்போது இந்திய அணி சார்பாக தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் பி.சி.சி.ஐ. சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது. அவருக்கு நூறாவது டெஸ்ட் கேப்பினை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி பிரீத்தி மற்றும் அவரது இரண்டு மகள்களும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பரிசளிப்பு விழாவிற்கு பிறகு தனது குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அஸ்வின் மைதானத்திற்கு களமிறங்குவதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் செய்த மரியாதை நெகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. அந்த வகையில் இந்திய அணியின் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டதுக்கு இணங்க அணி வீரர்கள் இருபுறமும் அரணமைத்து அஸ்வினை வரவேற்று மரியாதை செய்தனர்.

அஸ்வின் முதல் ஆளாக மைதானத்திற்கு செல்ல பின்னால் இந்திய வீரர்கள் சென்றனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அஸ்வினுக்கு வழங்கிய இந்த மரியாதை பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com