14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்

14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.
14 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று இன்று தொடக்கம்
Published on

துபாய்,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 10 இடங்கள் வகிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 6 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 2-ந்தேதி வரை நடக்கிறது.

தகுதி சுற்றில் கலந்து கொள்ளும் 14 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஏ பிரிவில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, நமிபியா, சிங்கப்பூர், கென்யா, பெர்முடா ஆகிய அணிகளும், பி பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து, ஓமன், ஹாங்காங், கனடா, ஜெர்சி, நைஜீரியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் டாப்-6 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

ஜிம்பாப்வே நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு ஐ.சி.சி. தடை விதித்து இருந்ததால், அந்த அணி தகுதி சுற்றில் விளையாடவில்லை. அந்த அணிக்கு பதிலாக நைஜீரியா இடம் பிடித்துள்ளது.

முதல் நாளான இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் ஸ்காட்லாந்து-சிங்கப்பூர் (இந்திய நேரப்படி பகல் 11.30 மணி), ஹாங்காங்-அயர்லாந்து (மாலை 3.40 மணி), கென்யா-நெதர்லாந்து (மாலை 3.40 மணி), ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி தொடங்கும் முன்பே சூதாட்ட சர்ச்சை வெடித்து விட்டது. ஐக்கிய அரபு அமீரக அணி வீரர்கள் முகமது நவீத், ஷாய்மன் அன்வர், கதீர் அகமது ஆகியோர் ஊழல் தடுப்பு விதியை மீறியதாக இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 3 லீக் ஆட்டங்களில் குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது முடிவை நிர்ணயிப்பதிலோ சூதாட்டம் செய்தால் அதற்கு ரூ.2 கோடி வரை தருவதாக அவர்களிடம் சூதாட்ட புரோக்கர்கள் பேரம் பேசியது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவினர் மற்ற வீரர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com