

பெங்களூரு,
11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இதையொட்டி வீரர்களின் இரண்டு நாள் மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாள் ஏலத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 16 வயது வீரர் முஜீப் ஜாத்ரானை பஞ்சாப் அணி ரூ. 4 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது. முஜீப் ஜாத்ரானை ஏலம் எடுப்பதற்கு பஞ்சாப் மற்றும் டெல்லி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. டெல்லி அணி ரூ. 2.2 கோடிக்கு கேட்ட நிலையில் பஞ்சாப் அணி ரூ. 2.40 கோடிக்கு கேட்டது. இதனையடுத்து டெல்லி ரூ. 2.60 கோடிக்கு கேட்க பஞ்சாப் மூன்று கோடியாக விலையை ஏற்றியது. டெல்லியும் தொடர்ந்து ஏலம் கேட்டது. இறுதியில் முஜீப் ஜாத்ரானை பஞ்சாப் அணி ரூ. 4 கோடிக்கு ஏலம் எடுத்தது.
சிக்கனமாக பந்து வீசக்கூடிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நேற்று ஐதராபாத் அணி ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது.
நேபாளம் நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் சந்தீப் முதல் முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளார். சிறுவன் சந்தீப்பை டெல்லி அணி ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேபாளம் நாட்டை சேர்ந்த முதல் வீரர் என்ற பெறுமையை தனதாக்கி உள்ளார்.