

ஹாமில்டன்,
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது.
இந்திய ஒருநாள் அணியில் அறிமுக வீரர்களாக பிரித்வி ஷாவும், மயங்க் அகர்வாலும், நியூசிலாந்து ஒருநாள் அணியில் புதுமுக வீரராக டாம் பிளன்டெலும் களம் இறங்கினார்கள். டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் களம் கண்டனர். இந்திய அணியில் அறிமுக வீரர்கள் இருவர் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடியது இது 4-வது முறையாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டி தொடரில் இருந்து விலகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் துரிதமாக ரன் சேர்த்தனர். இதனால் இந்திய அணி 50 ரன்களை 47 பந்துகளில் எட்டியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வலுவான அடித்தளம் அமைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பிரித்வி ஷா (20 ரன்கள், 21 பந்து 3 பவுண்டரி) காலின் டி கிரான்ட்ஹோம் பந்து வீச்சில் பொறுப்பு கேப்டனும், விக்கெட் கீப்பருமான டாம் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 32 ரன்கள் (31 பந்துகளில் 6 பவுண்டரியுடன்) எடுத்த நிலையில் டிம் சவுதி பந்து வீச்சில் டாம் பிளன்டெனால் அருமையாக கேட்ச் செய்யப்பட்டு நடையை கட்டினார். இதனால் இந்திய அணி 54 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
இதனை அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர், கேப்டன் விராட்கோலியுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும் நேர்த்தியாகவும் அடித்து ஆடினார்கள். 19.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100 ரன்னை தாண்டியது. சிறப்பாக ஆடிய விராட்கோலி 61 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 58-வது அரைசதம் இதுவாகும்.
அணியின் ஸ்கோர் 28.4 ஓவர்களில் 156 ரன்னாக இருந்த போது கேப்டன் விராட்கோலி (51 ரன்கள், 63 பந்து, 6 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் சோதி வீசிய பந்தை தடுத்து விளையாட முயற்சித்தார். ஆனால் பந்து அவரை ஏமாற்றி ஸ்டம்பை பதம் பார்த்தது. 3-வது விக்கெட்டுக்கு விராட்கோலி-ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி 102 ரன்கள் சேர்த்தது.
இதைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். எந்த வரிசையில் களம் இறங்கினாலும் தன்னால் அதிரடி காட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் லோகேஷ் ராகுல் அருமையாக விளையாடினார். சுழற்பந்து வீச்சை மட்டுமின்றி, வேகப்பந்து வீச்சையும் அவர் நாலாபுறமும் விளாசி தள்ளி வேகமாக ரன்கள் சேர்த்தார். 35.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 200 ரன்னை கடந்தது.
சோதி பந்து வீச்சில் தொடர்ச்சியாக 2 சிக்சர்கள் தூக்கிய லோகேஷ் ராகுல், டிம் சவுதி பந்து வீச்சிலும் இதேபோல் 2 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார். லோகேஷ் ராகுல் 41 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். அவர் அடித்த 7-வது அரைசதம் இதுவாகும்.
அரைசதத்தை கடந்த பிறகு மட்டையை வேகமாக சுழற்றிய ஸ்ரேயாஸ் அய்யர் டிம் சவுதி வீசிய ஒரு ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசினார். எளிதான ஒரு வாய்ப்பு உள்பட 3 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய ஸ்ரேயாஸ் அய்யர் 101 பந்துகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். ஸ்கோர் 45.3 ஓவர்களில் 292 ரன்னாக உயர்ந்த போது நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் (103 ரன்கள், 107 பந்துகள், 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிம் சவுதி பந்து வீச்சில் பவுண்டரி எல்லையில் மிட்செல் சான்ட்னெரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர்-லோகேஷ் ராகுல் ஜோடி 136 ரன்கள் திரட்டியது.
அடுத்து கேதர் ஜாதவ் களம் இறங்கினார். அவரும் அடித்து ஆடினார். அவர் டிம் சவுதி வீசிய ஒரு ஒவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி கலக்கினார். ஜேம்ஸ் நீஷம் வீசிய ஓவரில் லோகேஷ் ராகுல் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் சிக்சர் தூக்கி வியக்க வைத்தார். 46.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 64 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 88 ரன்னும், கேதர் ஜாதவ் 15 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்டும், காலின் டி கிரான்ட்ஹோம், சோதி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். ஸ்கோர் 85 ரன்னாக இருந்த போது மார்ட்டின் கப்தில் (32 ரன், 41 பந்து, ஒரு பவுண்டரி) ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த டாம் பிளன்டெல் (9 ரன்) குல்தீப் யாதவ் பந்து வீச்சை முன்னால் இறங்கி அடிக்க முயன்ற போது விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்சுடன் ஜோடி சேர்ந்தார். 10-வது அரை சதத்தை அடித்த ஹென்றி நிகோல்ஸ் 82 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் விராட்கோலியால் ரன்-அவுட் செய்யப்பட்டு நடையை கட்டினார். 4-வது விக்கெட்டுக்கு பொறுப்பு கேப்டன் டாம் லாதம், ராஸ் டெய்லருடன் கைகோர்த்தார். இருவரும் இந்திய பவுலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் தெறிக்கவிட்டு உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டியதுடன், அணியை வெற்றிப்படிக்கட்டில் பயணிக்க வைத்தனர்.
அதிரடியாக ஆடி 16-வது அரைசதத்தை கடந்த டாம் லாதம் (69 ரன்கள், 48 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) குல்தீப் யாதவ் பந்து வீச்சில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 309 ரன்னாக இருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர்-டாம் லாதம் ஜோடி 138 ரன்கள் சேர்த்தது. அதிரடியில் சரவெடியாய் வெடித்த ராஸ் டெய்லர் 73 பந்துகளில் சதத்தை தொட்டார். அவர் அடித்த 21-வது சதம் இதுவாகும். ராஸ் டெய்லருடன் இணைந்த ஜேம்ஸ் நீஷம் (9 ரன்), காலின் கிரான்ட்ஹோம் (1 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர்.
48.1 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 348 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 109 ரன்னும், மிட்செல் சான்ட்னெர் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 12 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், முகமது ஷமி, ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். சதம் அடித்த நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஸ்ரேயாஸ் அய்யரின் கன்னி சதம் அணியின் வெற்றிக்கு உதவாமல் வீணானது. ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் அதிகபட்ச சேசிங் (இலக்கை எட்டிப்பிடிப்பது) இதுவாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டில் ஹாமில்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அந்த அணி 347 ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டிப் பிடித்து இருந்தது. அத்துடன் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணியின் அதிகபட்ச சேசிங் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை கண்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை 5 -0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியிருந்த இந்திய அணி, நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் 8-ந் தேதி நடக்கிறது.