

சென்னை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறும் இந்த டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்டுடன் விலகிய நிலையில் ரஹானே தலைமையில் இந்திய அணி வெற்றியை தன்வசப்படுத்தியது.
இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி, முதலில் இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இன்று காலை தொடங்கியுள்ள இந்த போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இதனால் இந்திய அணி பந்து வீசுகிறது. இந்திய அணியில் நதீம் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு இது அறிமுக டெஸ்ட் போட்டியாகும். இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பர்ன்ஸ் மற்றும் சிப்லி அடித்து விளையாடினர்.
அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. பர்ன்ஸ் 2 பவுண்டரிகளுடன் 60 பந்துகளில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்து உள்ளார். இதன்பின்னர் லாரன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
அந்த அணி 27 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. சிப்லி 26(96) மற்றும் ரூட் 4(5) ரன்களுடன் விளையாடி வருகின்றனர். தொடர்ந்து, உணவு இடைவேளை விடப்பட்டது.
எனினும் அடுத்த 7 ஓவர்களில் அந்த அணி 11 ரன்களையே எடுத்துள்ளது. 34 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து இங்கிலாந்து விளையாடி வருகிறது.