இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி - தொடரையும் கைப்பற்றியது

இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இலங்கையை பதம்பார்த்த ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
Published on

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. இலங்கை அணியில் மூன்று மாற்றமாக பனுகா ராஜபக்சே, ஒஷாடா பெர்னாண்டோ, கசுன் ரஜிதா ஆகியோர் நீக்கப்பட்டு அவிஷ்கா பெர்னாண்டோ, நிரோஷன் டிக்வெல்லா, உதனா சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் தனது சகோதரரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் அவருக்கு பதிலாக ஸ்டான்லேக் இடம் பிடித்தார்.

இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. குசல் பெரேரா (27 ரன்), குணதிலகா (21 ரன்) ஆகியோரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் 20 ரன்களை கூட தாண்டவில்லை. முடிவில் அந்த அணி 19 ஓவர்களில் 117 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டான்லேக், கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (0) மலிங்காவின் முதல் ஓவரிலேயே விக்கெட் கீப்பர் குசல் பெரேராவிடம் கேட்ச் ஆனார். இதன் பின்னர் டேவிட் வார்னரும், முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் கைகோர்த்து அரைசதம் விளாசியதுடன் எளிதில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வார்னர் 60 ரன்களுடனும் (41 பந்து, 9 பவுண்டரி), ஸ்டீவன் சுமித் 53 ரன்களுடனும் (36 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர். வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் இதற்கு முன்பு விளையாடிய மூன்று 20 ஓவர் தொடர்களிலும் இலங்கை அணியே வெற்றி கண்டிருந்தது. இப்போது அங்கு இலங்கை அணி முதல்முறையாக தொடரை தாரைவார்த்துள்ளது.

தோல்வி குறித்து இலங்கை கேப்டன் மலிங்கா கூறுகையில், இது போதுமான ஸ்கோர் கிடையாது. ஷாட்டுகளை தேர்வு செய்து அடித்த விதம் சரியில்லை. மிடில் ஓவர்களில் நல்ல பார்ட்னர்ஷிப் அமையவில்லை. பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும். தோல்விக்கு மத்தியிலும் ஒரே ஒரு சாதகமான அம்சம் என்னவென்றால், இதே சீதோஷ்ண நிலையில் தான் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடப்போகிறோம். அதற்கு தயாராவதற்கு இந்த அனுபவம் உதவிகரமாக இருக்கும் என்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மெல்போர்னில் நாளை (வெள்ளிக் கிழமை) நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com