2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி: தோனி அதை செய்யாதது ஆச்சரியமாக இருந்தது - பெர்குசன்

2019-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
வெலிங்டன்,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.
மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.
ஆனால் அவருடைய சர்வதேச கெரியர் அந்த அளவுக்கு சிறப்பானதாக முடிவடையவில்லை. ஏனெனில் 2019-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது. அந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். எனவே அவரின் கெரியர் வெற்றியுடன் நிறைவடையாதது கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியது.
அந்த ஆட்டத்தில் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. இருப்பினும் ஜடேஜா - தோனி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதிரடியாக விளையாடிய ஜடேஜா போட்டியின் முக்கியமான தருணத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இருப்பினும் தோனி களத்தில் இருந்ததால் அவர் போட்டியை வெற்றிகரமாக இந்தியாவுக்கு முடித்து கொடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் ரன் அவுட் ஆகி ஏமாற்றத்தை கொடுத்தார். இந்திய அணியும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் அந்த ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடாதது தனக்கு ஆச்சரியமாக இருந்ததாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அப்போது இந்தியாவின் வெற்றிக்கு எத்தனை ரன்கள் அடிக்க வேண்டும் என்று எனக்கு நினைவில்லை. ஆனால் வெற்றிக்கு அவர்கள் நிறைய ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அப்போது தோனி அண்டர் கட் ஷாட் அடிக்கிறாரா என்பதைப் பார்ப்பதே எங்களுடைய திட்டமாக இருந்தது. ஆனால் தோனி அதை அடிக்காமல் விட்டார். அது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது.
ஏனெனில் பந்து வீசும்போது பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிரணி பேட்ஸ்மேன் பந்தை அடிக்காமல் விடுவது எங்களுக்கு நல்லது. ஆனால் அடுத்த ஓவரின் முதல் பந்தை நான் அதே போல வீசியபோது தோனி சிக்சர் அடித்தார். எனவே திட்டம் இரண்டாவது முறையும் கிட்டத்தட்ட வேலை செய்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் அவரை ஆட்டமிழக்கச் செய்து அரையிறுதியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.






