இன்னும் 268 ரன்கள்... இங்கிலாந்து மண்ணில் மாபெரும் சாதனை படைக்க உள்ள ரிஷப் பண்ட்


இன்னும் 268 ரன்கள்... இங்கிலாந்து மண்ணில் மாபெரும் சாதனை படைக்க உள்ள ரிஷப் பண்ட்
x

image courtesy:PTI

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்துடன் ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாட போகிறது? என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. மேலும் அவர்களின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியை ஜஸ்பிரித் பும்ரா முன்னின்று வழிநடத்த உள்ளார். இருப்பினும் அவரால் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கூறினார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இத்தகைய சூழலுக்கு மத்தியில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 20-ம் தேதி லீட்சில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட் இதுவரை 511 ரன்கள் அடித்துள்ளார். இந்த தொடரில் இன்னும் 268 ரன்கள் அடித்தால் இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை ரிஷப் பண்ட் படைப்பார்.

தற்போது இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி 778 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story