ஆஷஸ் 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 334 ரன்களில் ஆல் அவுட்


ஆஷஸ் 2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 334 ரன்களில் ஆல் அவுட்
x

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 138 ரன்கள் அடித்தார்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து பென் டக்கெட்டும், ஜாக் கிராலியும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே டக்கெட் (0) ஸ்லிப்பில் நின்ற லபுஸ்சேனிடம் சிக்கினார். அடுத்து வந்த ஆலி போப்பையும் (0) ஸ்டார்க் காலி செய்தார்.

3-வது விக்கெட்டுக்கு கிராலியும், ஜோ ரூட்டும் கைகோர்த்து சரிவை தடுத்து நிறுத்தினர். அஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் கணிசமாக ரன் திரட்டினர். அணியின் ஸ்கோர் 122-ஐ எட்டியபோது கிராலி 76 ரன்களில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் ஜோ ரூட் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலை கொண்டு ஆட இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. ஹாரி புரூக் 31 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 19 ரன்னிலும், ஜேமி சுமித் ரன் ஏதுமின்றியும், வில் ஜாக்ஸ் 19 ரன்னிலும் வெளியேறினர்.

சிறப்பாக ஆடிய ஜோ ரூட் பவுண்டரியுடன் தனது 40-வது சதத்தை பூர்த்தி செய்தார். அதே சமயம் ஆஸ்திரேலிய மண்ணில் அவரது முதலாவது சதம் இதுவாகும். ஒரு கட்டத்தில் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் நேற்றே முடிந்துவிடும் போல் தோன்றியது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன், ஜோப்ரா ஆர்ச்சர் இணைந்து சிறப்பாக ஆடினார்.

இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 135 ரன்களுடனும், ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரெண்டன் டாகெட் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (38 ரன்கள்) ஆட்டமிழந்தார். அதோடு இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் 76.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 334 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ரூட் கடைசி விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.

1 More update

Next Story