2-வது ஒரு நாள் போட்டி: 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி


2-வது ஒரு நாள் போட்டி:  2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
x
தினத்தந்தி 23 Oct 2025 5:15 PM IST (Updated: 23 Oct 2025 5:18 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றுள்ளது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். கடந்த போட்டியிலும் விராட் கோலி டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. இதனால் 17 ரன்களுக்கு 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது.

இந்த நிலையில் ரோகித் - ஷ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அவ்வப்போது பவுண்டரிகளை பறக்கவிட்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா 73 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் 61 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த அக்‌ஷர் படேலும் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளும், சேவியர் பார்ட்லெட் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. இதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர்.

அவர்களில் மார்ஷ் (11), ஹெட் (28) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், மேத்யூ ஷார்ட் 74 (4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள்) அரை சதம் விளாசினார். ரென்ஷா (30), அலெக்ஸ் கேரி (9) ஆட்டமிழந்தபோதும், கூப்பர் கன்னோளி (61) அரை சதம் எடுத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அவர் ஆட்டமிழக்கவில்லை.

ஓவன் (36), சேவியர் பார்ட்லெட் (3), ஸ்டார்க் (4) ரன்களிலும் வெளியேறினர். ஆடம் ஜம்பா (0) ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆஸ்திரேலிய அணி 46.2 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்களை எடுத்தது. இதனால், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றுள்ளது.

1 More update

Next Story