2வது ஒரு நாள் போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
2வது ஒரு நாள் போட்டி: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
Published on

புனே,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் போட்டி தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது.

ரசிகர்களுக்கு அனுமதி இன்றி நடைபெறும் இந்த போட்டி தொடர் பூட்டிய ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (25), ஷிகர் தவான் (4) ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரை சதம் பூர்த்தி செய்துள்ளார். அவர், 66 ரன்கள் (79 பந்துகள் 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்திருந்தபோது, ரஷீத் பந்து வீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கோலி, ராகுல் இணை 119 பந்துகளில் 100 ரன்களை எடுத்தனர். கோலியை தொடர்ந்து ராகுலும் அரை சதம் விளாசினார். முதல் ஒரு நாள் போட்டியில் அரை சதம் அடித்த கோலி (56) இந்த போட்டியிலும் அரை சதம் விளாசினார். இதேபோன்று ராகுலும் முதல் ஒரு நாள் போட்டியில் அரை சதம் (62) அடித்ததுடன் இந்த போட்டியிலும் அதிரடி காட்டி அரை சதம் மற்றும் சதம் விளாசினார்.

ராகுலுடன் இணைந்து விளையாடிய ரிஷாப் பண்ட் அரை சதம் அடித்தது அணிக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்தது. அவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்கள் சேர்ந்தது. இந்த இணை 80 பந்துகளில் 113 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டாம் கர்ரன் பந்து வீச்சில் ராகுல் அடித்த பந்து, ரீசி டாப்ளே கைகளில் சிக்கியது. இதனால், ராகுல் 108 (114 பந்துகள், 7 பவுண்டரி 2 சிக்சர்) ரன்களில் ஆட்டமிழந்து அறைக்கு திரும்பினார்.

தொடர்ந்து, ரிஷாப் பண்ட் 77 (40 பந்துகள் 3 பவுண்டரி 7 சிக்சர்கள்) ரன்களிலும், ஹர்தீக் பாண்ட்யா 35 (16 பந்துகள் 1 பவுண்டரி 4 சிக்சர்கள்) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். குருணல் பாண்ட்யா (12) மற்றும் ஷர்துல் தாக்குர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றி பெற 337 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினர். ராய் 55 ரன்களை (52 பந்துகள், 7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார்.

ஆனால், மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோ சதம் விளாசினார். அவர் 124 ரன்கள் (112 பந்துகள், 11 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்திருந்தபோது பிரசீத் கிருஷ்ணா பந்து வீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பென் ஸ்டோக்ஸ் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவர் 4 பவுண்டரி, 10 சிக்சர்களுடன் 52 பந்துகளை சந்தித்து 99 ரன்கள் எடுத்து சதம் அடிக்க தவறினார்.

பிரசீத் கிருஷ்ணா பந்து வீச்சில் ஜோஸ் பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் போல்டானார். டேவிட் மலான் (16), லையாம் லிவிங்ஸ்டன் (27) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 43.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து 337 ரன்களை எடுத்தது. இதனால், 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com