2-வது டி20: அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

image courtesy:twitter/@ProteasMenCSA
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக டிம் டேவிட் அரைசதம் அடித்தார்.
டார்வின்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி டார்வினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரெவிஸ் 125 ரன்கள் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் மற்றும் துவார்ஷியூஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன டிராவிஸ் ஹெட் (5 ரன்), கிரீன் (9 ரன்) விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். மிட்செல் மார்ஷ் (22 ரன்கள்), டிம் டேவிட் (50 ரன்கள்), அலெக்ஸ் கேரி (26 ரன்கள்) போராடியும் பலனில்லை. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். முன்னணி வீரரான மேக்ஸ்வெல் 16 ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தார்.
வெறும் 17.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா 165 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. அபாரமாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்கா தரப்பில் க்வேனா மபாகா மற்றும் கார்பின் போஷ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பிரெவிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது.






