2-வது டி20: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
2-வது டி20: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி
Published on

கெபேஹா,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் விளையாடியதால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் என்ற கவுரமான நிலையை எட்டியது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 39 ரன்களும், அக்சர் படேல் 27 ரன்களும் அடித்தனர்.

இதனையடுத்து 125 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி கடும் நெருக்கடி கொடுத்தார். ஆனால் மற்ற பவுலர்களிடம் இருந்து அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இறுதி கட்டத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த ஜெரால்ட் கோட்ஸி (9 பந்துகளில் 19 ரன்கள்) அதிரடியாக விளையாடி அழுத்தத்தை குறைத்தார்.

19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 47 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற உதவினார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com