இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பும்ரா விளையாடுகிறாரா..? வெளியான புதிய தகவல்

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

பர்மிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்க மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. பணிச்சுமை காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த தொடரில் பும்ரா வெறும் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே கூறப்பட்டது.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பும்ரா 2-வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி களத்தில் காணப்படவில்லை. இதன் காரணமாக அவர் 2-வது போட்டியில் களமிறங்க மாட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியின் நேற்றைய பயிற்சியில் பும்ரா கலந்துகொண்டு பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் 2-வது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com