2-வது டெஸ்ட்: ஜோ ரூட்டை நோபாலில் போல்டாக்கினாரா ஆகாஷ் தீப்...? எம்சிசி விளக்கம்


2-வது டெஸ்ட்: ஜோ ரூட்டை நோபாலில் போல்டாக்கினாரா ஆகாஷ் தீப்...? எம்சிசி விளக்கம்
x

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஜோ ரூட்டை ஆகாஷ் தீப் கிளீன் போல்டாக்கினார்.

பர்மிங்காம்,

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427 ரன்னில் 'டிக்ளேர்' செய்து 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் முடிவில் 16 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் (24 ரன்), ஹாரி புரூக் (15 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான ஆட்டம் நேற்று நடைபெற்றது. தோல்வியில் இருந்து தப்பிக்க வேண்டிய நெருக்கடியுடன் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 88 ரன்கள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

முதல் இன்னிங்சில் 4 விக்கெட், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் என மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆகாஷ் தீப் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான ஜோ ரூட்டை அற்புதமாக பந்துவீசி ஆகாஷ் தீப் கிளீன் போல்டாக்கினார். அவரது அந்த பந்தை பல வீரர்கள் பாராட்டினர்.

ஆனால் அந்தப் பந்தை வீசும்போது ஆகாஷ் தீப் தனது வலது காலை பிட்ச்சின் வெளியே வெள்ளைக்கோட்டை தாண்டி ஊன்றியதாக பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் அலிசன் மிச்சேல் விமர்சித்தார். எனவே அது நோ-பால் என்றும், நடுவர்கள் அதைக் கவனிக்கவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்திருந்தார். இங்கிலாந்து முன்னாள் வீரரான ஜோனதான் டிராட்டும் அது நோபால் என்றே கூறினார். அந்த சமயத்தில் டிராட் உடன் இருந்த ரவி சாஸ்திரி அது நல்ல பந்து என்று சொன்னார். இது ஒரு வித சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அது நோ-பால் கிடையாது என்று கிரிக்கெட் சட்டங்கள் குறித்த அதிகாரபூர்வ அமைப்பான மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) உறுதிப்படுத்தியுள்ளது.

பந்தை வீசுவதற்கு முன் பவுலரின் கால் முதலாவதாக எங்கே தரையிறங்குகிறது என்பதே முக்கியம் என்று எம்சிசி கூறியுள்ளது. அதன்படி ஆகாஷ் தீப் முதலாவதாக தம்முடைய முன்னங்காலை வெள்ளைக் கோட்டுக்குள் வைத்தார். அதன் பின்பே அவருடைய பின்னங்கால் கொஞ்சமாக வெள்ளைக்கோட்டுக்கு வெளியே ஊன்றியது. அவர் தரையிறங்கிய புள்ளி வெள்ளைக் கோட்டுக்குள் இருந்தது. எனவே இது நோ-பால் கிடையாது என்று எம்சிசி விளக்கம் அளித்துள்ளது.

1 More update

Next Story