2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: இங்கிலாந்து 391/10 (128 ஓவர்)

2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் இங்கிலாந்து 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 391 ரன்கள் எடுத்துள்ளது.
2வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: இங்கிலாந்து 391/10 (128 ஓவர்)
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, லோகேஷ் ராகுலும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

வலுவான துவக்கம் கொடுத்த ரோகித்-ராகுல் கூட்டணி 126 ரன்களை (43.4 ஓவர்) எட்டிய போது உடைந்தது. ரோகித் சர்மா 83 ரன்களில் (145 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா (9 ரன், 23 பந்து) ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பேர்ஸ்டோவிடம் சிக்கினார்.

அடுத்த வந்த கேப்டன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுல் அபாரமாக ஆடி தனது 6வது சதத்தை நிறைவு செய்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் குவித்திருந்தது. 127 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சில நிமிடங்களில் ராபின்சன் பந்துவீச்சில் கேஎல் ராகுல் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.

பின்னர் வந்த வீரர்கள் இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 40 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியின் ராபின்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மொயீன் அலி 1 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ரோரி பர்ன்ஸ் (49), சிப்லி (11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹமீது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

இதன்பின் விளையாடிய ரூட் (48) மற்றும் பேர்ஸ்டோ (6) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2வது நாள் ஆட்டநேர முடிவில் 45 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில், இன்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், பேர்ஸ்டோ அரை சதம் கடந்து (57) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார். பட்லர் (23), மொயீன் அலி (27) ரன்களில் வெளியேறினர். கர்ரன் (0), ராபின்சன் (6), உட் (5), ஆண்டர்சன் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

3வது நாளில் 128 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் முடிவில், 27 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com